நேரம் என் செல்ல பிள்ளை - மூன்றாம் அத்தியாயம்

நேரம் என் செல்ல பிள்ளை - மூன்றாம் அத்தியாயம்
---------------------------------------------------------------------------------

அன்றைய இருபத்தியொன்றாம் நோயாளியாகிய சேகர்-ம் அவன் மனைவியும் டாக்டர் இர்ஷாத்-ன் முன் அமர்ந்தார்கள்.
அவன் கண்கள் ஓய்வில்லாமல் அழைத்துக்கொண்டு இருப்பதை டாக்டர் இர்ஷாத் கவனித்தார்.

பொதுவாக ஒரு நோயாளியின் தன்மையை உணர, மனநல மருத்துவர்கள் கடைபிடிக்கும் வழிகள் இரண்டு. அவர்களின் கண்களின் வழியாகவும், அவர்களிடம் உரையாடியோ, மனநல தன்மையை புரிந்து கொள்வார்கள். டாக்டர் இர்ஷாத்-ம் சேகரின் கண் அசைவை கொண்டு அவன் மனநலம் தொந்தரவுக்கு உட்பட்டதை புரிந்துக்கொண்டார். சிறிது நேரம் சேகரின் பார்வை மாறுதல்களை கவனித்து விட்டு, டாக்டர் இர்ஷாத் அவன் மனைவியின் பக்கம் திரும்பினார். அவள் பதட்டமான குரலில் பேசத்தொடங்கினாள்.

"இவர் என் கணவர், முழு பெயர் சேகர் சுப்ரமணியம், தனியார் வங்கி-ல வேலை செய்றார். எங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆகி நான்கு மாதங்கள் தான் ஆகுது. இன்னைக்கு காலை வரைக்கும் எல்லாமே சுமூகமாக தான் இருந்தது."

அவள் கடைசி வாக்கியத்தை சொல்லும் பொழுது அவள் கண்கள் அதிகமாக விரிந்து ஆச்சர்ய பட்டதை டாக்டர் இர்ஷாத் கவனித்தார். அந்த பெண் மீண்டும் பேச தொடங்கினாள்.

"வழக்கம் போல காலை-ல வங்கி-க்கு கிளம்பினார். எப்பவும் போல பேசிட்டே சாதாரணமாக தான் கிளம்பி போனார். அப்பறம் ஒரு மணி நேரம் கழித்து நான்கு பேர் அவரை ஒரு ஆட்டோ-ல கூட்டிட்டு வந்து வீட்ல இறக்கி விட்டாங்க. பஸ் ஸ்டாண்ட்-ல திடீர்னு மயங்கி விழுந்துட்டார்-னும், ஹாஸ்பிடல் கூட்டிட்டு போய் காட்டின எல்லாம் நார்மலா இருக்குனும் சொன்னாங்க. கேட்ட கேள்விக்கு எதுவும் பதில் சொல்லாம முழிச்சுட்டே இருந்ததால, அவர் ID கார்டு-ல இருக்கிற விலாசத்தை வைத்து வீட்டுக்கு கூட்டி வந்து இருந்தாங்க."

டாக்டர் இர்ஷாத் அவள் குரல் உடைவதை கவனித்தார். அந்த பெண் தொடர்ந்தாள்.

"ஆனால். இந்த சம்பவத்துக்கு அப்பறம் அவர் முழுவதுமாக மாறி விட்டார். அவர் அவராகவே இல்லை. இப்பொழுது வரை என்னிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இதே மாதிரி கண்களை உருட்டிக்கொண்டே இருக்கார்."

Lacrimation காரணமாக வழிந்த கண்ணீரை துடைத்துக்கொண்டு அவள் மீண்டும் பேச தொடங்கினாள்.

"என்ன நடந்துக்கொண்டு இருக்கிறது? ஏன் இவர் இப்படி மாறி விட்டார்? ஏன் மயங்கி விழுந்தார்? எனக்கு எதுவும் புரியவில்லை. வழி தேடி அவரை இங்கே அழைத்து வந்து இருக்கேன்."

டாக்டர் இர்ஷாத் அனைத்தையும் பொறுமையாக கேட்டுக்கொண்டு, சேகரின் பக்கம் திரும்பி அவன் கண்களை நோக்கியபடியே பேச தொடங்கினார்.

"ஹலோ சேகர், எப்படி இருக்கீங்க?"

சேகர் மௌனமாக கண்களை உருட்டியபடியே அமர்ந்து இருந்தான். டாக்டர் இர்ஷாத் காகிதத்தில் எதையோ குறித்துக்கொண்டு, சேகரின் மனைவியிடம்,

"இவரிடம் நான் சிறிது தனியாக பேச வேண்டும். நீங்க இங்கையே காத்துக்கொண்டு இருங்க."

அவள் ஒரு வினாடி சேகரை வருத்தத்துடன் பார்த்து விட்டு "சரி" என்றாள். டாக்டர் இர்ஷாத் சேகரை அந்த இருட்டு அறைக்கு அழைத்து சென்று, அந்த சிறிய மஞ்சள் நிற பல்பு-ஐ எரிய செய்தார். சேகரை ஒரு நாற்காலியில் அமர வைத்து நேர் எதிரே டாக்டர் இர்ஷாத்-ம் அமர்ந்துக்கொண்டார். அவன் கண்கள் இன்னும் ஓய்வில்லாமல் ஓடிக்கொண்டு இருப்பதை கவனித்து விட்டு, அவன் கண்களை நோக்கியே பேச தொடங்கினார்..

"உங்கள் பெயர் என்னவென்று தெரிந்து கொள்ளலாமா?"

மௌனம்.........

"நான் என் வலது கையில் என்ன வைத்து இருக்கிறேன் என்று தெரிகிறதா?"

மௌனம்........

டாக்டர் இர்ஷாத் எழுந்து அங்கு அடுக்கி வைக்க பட்டிருந்த மேஜையிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்து எதையோ தேட தொடங்கினார். அப்பொழுது அவன் கண் அசைவு நின்று விட்டதை இர்ஷாத் கவனிக்க தவறினார்.

"தங்களிடம் அனைத்து புத்தகங்களும் இருக்கிறதா?"

இர்ஷாத் ஆச்சர்யத்துடன் அவன் பக்கம் திரும்பி, "என்ன கேட்டீர்கள்?" என்றார்.

"தங்களிடம் 'கால பயணம் -  குறிப்புகள்' புத்தகம் இருக்கிறதா?"

டாக்டர் இர்ஷாத் ஆச்சர்யத்தில் மூழ்கி, அவனை பார்த்து "அப்படியென்றால்???" என்று கேட்டார்.

"என்னுடைய புத்தகம். நான் எழுதிய புத்தகம். கால பயணம் - குறிப்புகள்"

இர்ஷாத் சற்று அதிர்ச்சியில் இருந்து மீண்டு, "அப்படியொரு புத்தகத்தை நான் கேள்வி பட்டதே இல்லையே" என்றார்.

சேகர் அதிர்ச்சியும், கோவமும் கலந்து, "என்னது????? என் புத்தகத்தை தொலைத்து விட்டீர்களா? உன்னதமான பொக்கிஷங்களை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்று கூட உங்களுக்கு தெரியவில்லையா???"

டாக்டர் இர்ஷாத் அதிர்ச்சியில் உறைந்து பேச முடியாமல் நிற்க, சேகர் தொடர்ந்தான்.

"திருக்குறள் கேள்வி பட்டு இருக்கிறீர்களா?"

"ஆம். அந்த ஆயிரத்து முன்னூத்தி முப்பது இரண்டு அடி கவிதைகள் தானே?"

"என்னது???? வெறும் ஆயிரத்து முன்னூத்தி முப்பதா? திருக்குறள் மொத்தம் ஐயாயிரத்துக்கும் மேலே. மீதி பாடல்கள் எங்கே?"

என்று சேகர் அதிர்ச்சியில் இர்ஷாத்-ஐ பார்த்து கேக்க, இர்ஷாத் பிரமிப்புடன் சேகரை ஒரு வினாடி பார்த்து விட்டு,

"மன்னிக்கவும் எனக்கு தெரியவில்லை" என்றார்.

சேகர் ஆத்திரம் அடைந்து, உரத்த குரலில்,

"உங்கள் யாருக்கும் பொறுப்பு என்பதே இல்லை. வரலாறின் மகிமை புரிவதில்லை. பழைமையை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்று கூட அறியவில்லை."

"வரலாற்றில் என்ன உள்ளது. இந்த நவீன உலகத்தில் வரலாறு அவசியம் இல்லாத ஒன்று. எங்களை பொறுத்தவரை வரலாற்றில் வாழ்ந்தவர்கள் ஐந்து அறிவு மிருகங்கள் தான்" என்று டாக்டர் இர்ஷாத் பதில் அளித்தார்.

இதை கேட்ட சேகரின் கண்கள் விரிந்தன, மீண்டும் அந்த ஓய்வில்லாத அசைவு நிலைக்கு திரும்பியது. டாக்டர் இர்ஷாத் சிறிது நேரம் பொறுமையாய் கவனித்து விட்டு, அவன் முன்னாள் அமர்ந்து மென்மையான குரலில் பேச தொடங்கினார்.

"சரி. முதலில் நீங்கள் யார் என்று சொல்லுங்கள். உங்களுக்கும் வரலாறுக்கும் என்ன சம்மந்தம்? நீங்கள் ஒரு வரலாறு ஆசிரியரா?"

சேகர், ஒரு வினாடி பெருமூச்சு விட்டுக்கொண்டு பேச தொடங்கினான்,

"என் பெயர் சித்தயோகி. நான் கி.மு. இரண்டாம் நூற்றாண்டிலிருந்து வருகிறேன். நீங்கள் அனைவரும் எங்கள் உன்னதமான படைப்புக்களை பத்திரமாக வைத்து உள்ளீர்களா என்று காண வந்துள்ளேன்."

டாக்டர் இர்ஷாத், இதை கேட்டு அதிர்ச்சியில் உறைந்து நின்றார்.

------ தொடரும்

Comments