நியூட்ரினோ திட்டம் : மெய்யும் புரளிகளும்

நியூட்ரினோ திட்டம் : மெய்யும் புரளிகளும்

முனைவர் த. வி. வெங்கடேஸ்வரன், விக்யான் பிரசார், புதுடெல்லி

மின்சுமையற்ற நுண்ணிய நியுட்ரினோ என்ற ஓர் அடிப்படைத் துகள் உள்ளது. கைவிரல் நக அளவு இடம் வழி ஒவ்வொரு நொடியும் சுமார் நானுறு கோடி நியுட்ரினோக்கள் இரவு பகல் என்ற வித்தியாசம் இன்றிப் பாய்ந்துக்கொண்டே இருக்கின்றன. ஒளியின் துகள் போட்டானுக்கு அடுத்தபடியாக பிரஞ்சத்தில் கூடுதல் எண்ணிகையில் இருப்பது இந்தத் துகள்களே ஆகும். அதன் தன்மை குணம் முதலியவற்றை அறிந்துகொள்ளும் ஆர்வத்தில் உலகெங்கும் விஞ்ஞானிகள் நோக்குக்கூடத்தை அமைத்து ஆராய்ந்து வருகிறார்கள்.

தாமும் இதுபோன்ற முன்னணி அறிவியல் ஆய்வில் ஈடுபடவேண்டும் எனும் நோக்கில் குறிப்பாக வளிமண்டல நியுட்ரினோக்களை ஆராயும் படியான ஒரு திட்டத்தை சில இளம் இந்திய விஞ்ஞானிகள் 2000இல் முன்வைத்தனர். அரசின் பல்வேறு கேள்விகளுக்குப் பதில் அளித்து இறுதியில் 2015-இல் இந்த்த் திட்டத்துக்கு அரசு நிதி ஒப்புதல் அளித்தது.

தொலைவில் உள்ள கோள்கள், விண்மீன்கள் முதலியவற்றிலிருந்து வரும் போட்டான் துகள்களைச் சேகரித்து வானவியல் தொலைநோக்கி, பிரபஞ்சக் காட்சியை நம் முன்னே தருகிறது. சென்னை போன்ற நகர்ப்பகுதியில் தரையின் மீது அந்தத் தொலைநோக்கியை வைத்தால் வீடு தெரு முதலியவற்றில் பளீர் என எரியும் விளக்கின் ஒளியில் மங்கலான தொலைவு வான் பொருளை தொலைநோக்கி காட்ட முடியாது போகும். எனவே தான்அந்த வானவியல் தொலைநோக்கியைப் பொதுவாகவே உயரமான மலையின் மீது வைப்பார்கள்.

அதே போல நியுட்ரினோ கருவியைத் தரை மீது வைத்தால் அதில் வெறும் நியுட்ரினோ மட்டுமல்ல காஸ்மிக் கதிர்களும் வந்து படும். காஸ்மிக் கதிர்கள் ஏற்படுத்தும் இரைச்சலில் நியுட்ரினோவைக் காணுதல் முடியாது போகும். எனவே காஸ்மிக் கதிர்கள் அண்டாதபடி மலையை குடைந்து அடியில் நியுட்ரினோ உணர்வியை வைத்துத்தான் பொதுவாக எல்லா ஆய்வுகளும் நடைபெறுகின்றன.

இந்திய நியுட்ரினோ ஆய்வு நடைபெற அடர்த்தியான பாறைகளால் ஆன சுமார் ஒன்றரை கிலோமீட்டர் உயரம் கொண்ட மலையின் கீழே மலைப்பாதை போல குகைப்பாதை தோண்டி, மலையின் உட்பகுதியில் குகை ஏற்படுத்தி நியுட்ரினோ உணர்விக் கருவியை வைக்கவேண்டும். வளிமண்ட நியுட்ரினோ ஆய்வு என்பதால் நிலநடுக்கோட்டுக்கு அருகே அமைதல் ஆய்வுக்கு வலுச்சேர்க்கும். மேலும் இந்த்த் திட்டம் செயல்படுத்த விவசாய நிலம் கையகப்படுத்தக் கூடாது, வனப்ப் பகுதிகளை அழிக்கக் கூடாது எனக்கருதி அதற்கு ஏற்ற பகுதியைத் தேடினர் ஆய்வு விஞ்ஞானிகள். புவியியல் அறிஞர்கள் உதவியோடு தேனி மாவட்டத்தில் பொட்டிப்புரத்தில் எல்லாம் பொருந்துமாறு ஏற்ற இடத்தைத் தெரிவு செய்தனர். அங்கே அந்த நோக்குக்கூடத்தை அமைக்கத் திட்டம் தீட்டினர்.

50,000 டன் எடை கொண்ட மின்காந்தம் செய்யப்பட்ட இரும்பு தகட்டின் நடுவே மின்னணுக் கருவிகளைப் பொருத்தி அமைந்த இந்த உணர்விக்கருவியின் ஊடே நியுட்ரினோ பாயும்போது எப்போதாவது இரும்பு அணுவில் ஏற்படுத்தும் மெல்லிய நுண் சலனத்தை மின்னணுக் கருவிகள் வழி உணர்ந்து அதன் பாதை, திசை, வேகம் முதலிய தன்மையை அறிந்துகொள்ளலாம்.

இந்தச் சமயத்தில் தான் சூழல் போராளிகள் சிலர் "ஆபத்து” என்று கூக்குரல் எழுப்பினர். "எங்கோ செல்லும் நியுட்ரினோக்களை இந்தப் பெரிய காந்தம் பிடித்து இழுக்கும்.... மின்வெட்டு ஏதேனும் ஏற்பட்டால் நியுட்ரினோகள் எல்லாம் சுற்றும் முற்றும் உள்ள நூறு கிலோமீட்டர் தொலைவுக்குப் பாய்ந்து நிலத்தடி நீரை மாசுபடுத்திவிடும்" என்று கதை கட்டி விட்டனர். தற்போது நடைபெற்றுவரும் புனலூர் மலைக்குகை ரயில் பாதைபோலதான் இந்த ஆய்வு குகையும் அமையும். ஆயினும் இந்த ஆய்வுக் குகையைத் தோண்டும்போது பயன்படுத்தப்படும் வெடி அதிர்வுகள் முப்பது கிலோமீட்டர் சென்று முல்லைபெரியார் அணையை உடைத்துவிடும் எனப் போலியாக வாதம் செய்தனர். ஆபத்து ஏதுமற்ற, சாதுவான, மாசு எதுவும் வெளியே உமிழாத அடிப்படை ஆய்வை எதோ பூதாகரமான ஆபத்து சோதனை என இந்தப் போலி வாதம் சித்தரிக்க, அந்தப் பகுதி மக்கள் மனதில் கலக்கம் எழுந்தது.

"பிள்ளையார் பால் குடித்தார்", "ஆறாயிரம் ஆண்டுகள் முன்னால் புஷ்பக விமானம் ஓடியது", "ஆண் மயிலை கூடாமல், அதுசிந்தும் கண்ணீரைப் பருகி பெண் மயில் கருத்தரிகிறது" போன்ற போலி அறிவியல் வாதம் போன்றதே மின்சுமையற்ற நியுட்ரினோ காந்தத்தால் கவரப்படும் என்பதும். ஐந்து அல்லது பத்து கிலோ வெடிமருந்தை வெடிக்கும்போது ஏற்படும் அதிர்வுகள் பல கிலோமீட்டர் சென்று அணையைப் பாதிக்கும் என்று கூறுவது "வீட்டுக்கு வீடு பதினாறு துளசிச் செடியை நட்டால் வளிமண்டலம் சுத்தம் ஆகி, காலநிலை ஆபத்திலிருந்து தப்பிக்கலாம்", "யாகம் செய்யும் புகை காற்றைச் சுத்தம் செய்யும்" போன்ற அபத்தங்களுக்கு சமமானதே ஆகும்.

போபால் விஷ வாயு விபத்து முதல் பெரும்பாலான சம்பவங்களில் சாதாரண மக்கள் பாதிப்பு அடையும்போது அரசமைப்பு வாளாவிருந்தது என்பதே பொதுமக்களின் அனுபவம். பொருளாதார வளர்ச்சியின் பயன் பெரும்பாலும் ஒருசிலருக்கு மட்டுமே சென்று சேர்ந்து, ஏழை-பணக்காரன் இடைவெளி மென்மேலும் அதிகரிக்கும் நடைமுறை அனுபவப் பின்னணியில் எங்கள் பகுதியில் இவ்வளவு ஆபத்தான ஆய்வு அவசியமா என்ற பீதி கவலை எழுந்தது இயல்பே.

நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் என்றும் எப்போதும் பூமியின் எல்லா பகுதியிலும் பல கோடி கோடி நியுட்ரினோக்கள் விழுந்துகொண்டே தான் இருக்கின்றன. அவையெல்லாம் பூமியைத் துளைத்து உள்ளே சென்று நிலத்தடி நீர் மீது விழுந்துகொண்டே தான் இருக்கின்றன. மேலும் பள்ளி இடைநிலை அறிவியல் சரியாக புரிந்து இருந்தால் நியுட்ரினோ போன்ற மின்சுமையற்ற துகள்களைக் (neutral particles) காந்தம் கவர முடியாது என்பது சட்டேன்று புரிந்து போலி வாதத்தின் முகமூடி கிழிந்து போயிருக்க வேண்டும். எந்த அதிர்வும் தொலைவு செல்லச்செல்ல வீரியம் குறையும். எனவே எவ்வளவு தொலைவு வெடியின் அதிர்வு செல்லும் என்பதைச் சாதாரண எஞ்சினியர் கணக்கிட முடியும். ஆனால் ஏட்டுச்சுரைக்காய் மனப்பாடக் கல்விமுறையே அறிவியல் கல்வியாகத் திகழும் நிலையில் சாதாரண மக்களால் போலி வாதத்தைத் தோலுரித்துப் பார்ப்பது எளிதாக இருக்கவில்லை.

அறிவியல் துறையில் ஆய்வு செய்யும் சில நபர்கள் "பெய்யும் மழையை மழைமானி அள்ளப்பது போல எப்போதும் இயல்பாக வெளிப்படும் வளிமண்டல நியுட்ரினோவைத் தான் இந்த கருவி ஆய்வு செய்யும். இந்த கருவியில் நியுட்ரினோ உற்பத்தி எதுவுமில்லை, எங்கோ செல்கின்ற நியுட்ரினோக்களைக் காந்தம் கொண்டு கவர்ந்து இழுக்கவும் முடியாது. அந்தப் பகுதி மக்களுக்கு அடிப்படை அறிவியல் பார்வைகூடவா இல்லை" என்று ஆதங்கப்படுகிறார்கள்.

மறுபுறத்தில் ஊடகப் போராளி நண்பர்கள் "மக்கள் விரும்பாத நிலையில், அந்த பகுதிமக்களின் செண்டிமெண்டை கணக்கில் கொள்ளது அங்கே தான் அந்த அறிவியலாளர்கள் ஆய்வு செய்யவேண்டும் என அடம் படிப்பது அறமா, குஜராத்துக்கு எடுத்துச் செல்லவேண்டியது தானே என்கிறார்கள்.  

தொடர்ந்து திசை திருப்பும் பதிவுகள் செய்யப்படும் சூழலில் நியூட்ரினோ அடிப்படை அறிவியல் ஆய்வு திட்டம் குறித்து சமூக வலைதளத்தில் மற்றும் ஊடகங்களில் வெளிப்படும் சில கேள்விகளுக்கு என் கருத்தை தர விரும்புகிறேன்.

1) தேனியை விட்டால் இந்த ஆய்வை செய்ய வேறு இடமே இந்தியாவில் இல்லையா? ஆபத்தே இல்லை என்றால் குஜராத்துக்கு போகவேண்டியது தானே…இல்லையென்றால் கேரளவில் மேலும் பழமை வாய்ந்த பொன்முடி மலையில் அமைக்கவேண்டியது தானே?

ஒவ்வொரு ஆய்வுக்கூடத்துக்கும் ஏற்ற இட அமைப்பு உள்ளது. ஏனோதானோ என எங்கு வேண்டுமென்றாலும் அமைக்க முடியாது. எடுத்துகாட்டாக தொலைநோக்கிகள் அமைக்கும்போது பொதுவே உயரமான மலைகளின் மேலே தான் அமைப்பார்கள். அதுபோல இந்த ஆய்வு மேற்கொள்ள சில நிலவியல் கூறுகள் அவசியம்.காலத்தால் மிகப்பழைய மலையாக இருக்க வேண்டும் என்பது மட்டும் போதாது. ஆய்வுக்கான இடத்தைத் தேர்வு செய்யும்போது பல அம்சங்களை கவனத்தில் கொள்ளவேண்டும்.

இந்த ஆய்வு செய்ய மலையின் அடிவாரத்தில் பாளை ரயில்குகை பாதை போல அந்த பகுதியில் உள்ள தரையோடு தரையாக குகை பாதை அமைத்து மலையின் உச்சி முடிக்கு கிழே நியுட்ரினோ உணர்வீ கருவியை வைக்க வேண்டும்.

காலத்தால் மிகப்பழைய மலையாக இருக்க வேண்டும் என்பது என் எனில் அந்த மலைகள் பொதுவே கடின பாறைகள் கொண்டு இருக்கும். குகை ரயில் பாதைபோல அமைக்கும்போது கட்டுமான உறுதி வேண்டும். இந்த இடம் இந்தியாவிலுள்ள குறைந்த நில அதிர்வு பகுதியில் (Zone - II) அமைந்திருக்கிறது. எனவே சுரங்கம் அமைப்பது எளிதாகிறது. இமயமலை உயரமானதுதான். ஆனால் கடினமானது அல்ல.. இமயமலைப் பகுதி பெரும்பாலும் படிமப் பாறைகளால் ஆனது.  சிறு சிறு பாறைகளால் ஆன தொகுப்பாக உள்ளதால், அங்குள்ள பாறைகளில் உறுதித்தன்மை மிகவும் குறைவு. மற்ற மாநிலங்களிலும் பாறைகளின் தன்மை இந்த ஆய்வுக்கு ஏற்றதாக இல்லை.

தேனி மாவட்டத்தின் மேற்கு போடி மலையிலுள்ள பாறைகள் மிகவும் கடினமான சார்னோக்கைட் பாறைகளால் ஆனவை. அதாவது, இமயமலையைப்போல சிறு சிறு பாறைகளின் தொகுப்பாக இல்லாமல், ஒரே பாறையிலான மலைகளாக இங்குள்ள மலைகள் உள்ளன.

அதுமட்டுமல்ல காடுகள் அடர்ந்த பகுதி என்றால் மரங்களை வெட்ட வேண்டிவரும். விவசாய நிலம் இருக்கும் பகுதி என்றால் விவசாய நிலத்தை கையகப்படுத்த வேண்டி வரும். எடுத்துகாட்டாக ஓரிடத்தில் உள்ள பாறைகள் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைய பொருத்தமாக இருந்தாலும் அந்தப்பகுதி விவசாய நிலமாகவோ அல்லது அடர்ந்த காடுகளாக அமைந்து மரங்களை வெட்டவேண்டிய நிலை ஏற்பட்டால் அந்த இடத்தைத் தேர்வு செய்வது சரியான முடிவாக இருக்காது.

அவ்வாறு விவசாய நிலமற்ற மரங்கள் அடர்ந்து இல்லாத இடமாக தேடி தேடி தான் இந்த மலை இறுதி படுத்தப்பட்டது. இந்த ஆய்வுக்காக தேர்வு செய்யப்பட்டு மாநில அரசால் ஒதுக்கப்பட்டுள்ள நிலத்துக்காக விவசாய நிலம் ஏதும் எடுக்கப்படவில்லை அதுபோல பாறையால் ஆன மலை என்பதால் காடுகளை வெட்ட  வேண்டிய அவசியமும் இல்லை.

மேலும் வளிமண்டல நியூட்ரினோக்களை ஆராய்ச்சி செய்யும்போது அது நிலநடுக்கோட்டுக்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு அருகில் அமைந்தால் நலம். காஸ்மிக் கதிர்களை போதுமான அளவு வடிகட்டி வெறும் நியுட்ரினோக்களை மட்டும்  வடிகட்டவும் பழமை பாறைகள் உதவும். உணர்வீயின் எல்லா திசையிலும் சுமார் ஒரு கிலோமீட்டர் மாரை அமையும் படி இருக்கவேண்டும். எனவே சுமார் ஒன்று அல்லது ஒன்றரை கிலோமீட்டர் உயரம் உள்ள மலை தேவை. அதற்காக கூடுதல் உயரம் உள்ள மலையை தேர்வு செய்தால் கட்டப்படும் குகையின் மீது அதன் மேலே உள்ள பாறைகளின் அழுத்தம் கூடுதலாக இருக்கும். குகை உடையும் ஆபத்து உண்டு. இதுபோல பல அம்சங்களை கொண்டு பார்க்கும்போது தான் இந்த இடம் பொருத்தம் என முடிவுக்கு வரமுடியும்.

2)  பல லட்சக்கணக்கான கிலோ வெடிமருந்துகளை கொண்டு மலையை தகர்க்கும் போது பல லட்சக்கணக்கான டன் பாறைகளை வெட்டி அகற்றும்போது சூழலில் பெரிய பாதிப்புகள் ஏற்படும் தானே. பூமிக்குள் சுரங்கம் செய்யும்போது நிலத்தடி நீர் பாதிப்பு ஏற்படாதா?

பல லட்சக்கணக்கான கிலோ வெடிமருந்துகளை கொண்டு மலையை தகர்க்கும் போது பல லட்சக்கணக்கான டன் பாறைகளை வெட்டி அகற்றும்போது சூழலில் பெரிய பாதிப்புகள் ஏற்படும் தானே. பூமிக்குள் சுரங்கம் செய்யும்போது நிலத்தடி நீர் பாதிப்பு ஏற்படாதாஎன்றெல்லாம் கேள்வி எழுப்பப்படுவது வேடிக்கை.

முதலில் யாரும் மலையை உடைத்து சுக்குநூறாக ஆக்கப் போவது இல்லை. கல்குவாரியில் வெடித்து பாறைகளை அகற்றுவது போலவும் அழிக்கப் போவது இல்லை. பூமிக்குள் கிணறு போல நேராக கிழே செல்லவும் போவது இல்லை. நிலத்துக்கு அடியில் ஆழ்துளை கிணறு போல போகப்போவதும் இல்லை. மெட்ரோ பாதாள ரயில் போல, மலை குகைக்குள் ரயில் பாதை அல்லது ரோடு செல்வது போல இரண்டு டிரக் லாரி செல்லும் அகலத்தில் சுமார் ஏழு மீட்டர் உயரத்தில் மலையை குடைந்து, தரையோடு தரையாக, பாதை அமைப்பார்கள். சரியாக மலையின் உச்ச்சிக்கு கிழே அந்த பாதை சென்றதும் கட்டுமானத்தை நிறுத்திவிடுவார்கள். மலைப்பாதை என்றால் மலையின் அடுத்த பக்கம் வெளியே ரோடு வரும். அவ்வளவு தான் வேறுபாடு. அந்த பாதையின் இறுதி முனையில் ஆய்வகம் அமையும். அதில் நியூட்ரினோ உணர்வீ அமைக்கப்படும். மழை மானி மழையின் அளவை அளவிடுவது போல இந்த உணர்வீ வளிமண்டல நியூட்ரினோக்களை அளவிடும்.

அடுத்து பயன்படுத்தப்போவது வெறும் 450 டன் வெடிமருந்து; ஐந்து வருடங்களில். பாதை போடுவதற்கு தான் இந்த வெடி என்பதால் ஒரு நாளைக்கு இரண்டு மூன்று முறைக்கு மேல் வெடிக்கமாட்டார்கள். மேலும் மாலையில் விரிசல் விழாத அளவுக்கு தான் குறைவாக ஆற்றலுடன் வெடிப்பார்கள். மேலும் இர்னடுமாதங்களில் சுமார்  300 மீட்டார் குகை அமைந்து விடும். அதன் பின்னர் உள்ளே கட்டுமானம் நப்டப்பது கூட வெளியே புலப்படாத அளவு தான் விளைவுகள் இருக்கும்.

தற்போது பல மாநகரங்களில் தரைக்கு கிழே மெட்ரோ ரயில் ஏற்படுத்துவதற்கு சுரங்க பாதை அமைக்கிறார்கள். கல்கத்தாவில் தற்போது ஆற்றுக்கு அடியில் செல்லும்படியான சுரங்கம் அமைக்கப்படுகிறது. எனவே இந்த தொழில்நுட்பம் ஏற்கனவே உள்ள நுட்பம் தாம். இந்த பகுதிக்கு அருகே புனலூர் ரயில் குகை பாதை போலதான் இதுவும்.

அடுத்து குறிப்பிட்ட ஆற்றலுடன் வெடி வெடித்தால் அந்த வெடியிலிருந்து உருவாகும் அதிர்வு அலைகள் எந்த விகிதத்தில் எந்த தொலைவில் எந்த ஆற்றலுடன் இருக்கும் என்பதை கணக்கிட சூத்திரங்கள் உள்ளன. எந்த ஒரு அதிர்வும் தொலைவு செல்ல செல்ல மங்கும் என நாம் அறிவோம். அவற்றை கொண்டு எளிதில் இவ்வாறு வெடிக்கும்போது ஏற்படும் அதிர்வு எவ்வளவு இருக்கும் என கணிதம் செய்துவிடலாம். Wt என்ற அளவு வெடிமருந்தை வெடித்தால்,  “Dist" என்ற தொலைவில் ஒருநொடியில் அதிரும் உயர்ந்த பட்ச அளவு எவ்வளவு என்பதை கிழ்கண்ட சூத்திரம் தரும்.

PPV = H x (Dist / Wt0.5)-1.6

இதில்H என்பது அதிர்வு கடத்தும் தன்மை. கடினமான தரையில் கூடுதல் தொலைவும், மணல் போன்ற பாங்கு உள்ள பகுதியில் குறைவான தொலைவும் தான் அதிர்வு செல்லும் என நாம் அறிவோம்.  அந்த பகுதி நிலஅமைப்பு மிககூடுதல் தன்மை கொண்டுள்ளது என்று வைத்துக் கொண்டாலும் கூட ஐநூறு மீட்டர் தாண்டி அதிர்வு உணரக் கூடிய நிலையில் கூட இருக்காது.

இந்த குகைப்பாதை அமைக்கும்போது உருவாகும் அதிர்வலைகள் 500 மீ தொலைவிற்கப்பால் 1 மி  மீ / செகண்ட் க்கும் குறைவாக இருக்கும் என ஆய்வுகள் தெரிவிகின்றன. இந்த அளவு நுணுக்க அதிர்வை உணரக்கூட  முடியாது. வைகை மற்றும் முல்லைப்பெரியாறு போன்ற நீரணைகள் 30 கீ மீ தொலைவிலுருப்பதால் எந்த ஒரு விளைவும் அவைகளுக்கு அறவே இருக்காது. இந்த அதிர்வலைகளை அருகிலுள்ள கிராமங்களிலும் உணர முடியாதென்பதுவே உண்மையாகும்.

3) ஆய்வகம் அமைப்பதாக சொல்லும் மலைப் பகுதியில் வருடத்தில் குறிப்பிட்ட மாதங்களில் பெரும் காற்றும் வீசுமே, பல பல சிறு கற்கள் முதல் பெரும் புழுதியை சுமந்து வருமே அதனால் கட்டுமான பணிகளில் தொய்வு ஏற்படலாம்; பகுதியில் புழதி படர்ந்து அவதியுறலாம்.

கட்டுமானம் முடிந்த பின் அங்கு சில மாதங்களில் வீசும் பெரும் காற்றால் ஆய்வகத்துக்கு எந்த தீங்கும் இல்லை, ஆய்வகதால் புதிதாக தூசி ஏற்படப்போவதும் இல்லை. எனவே கட்டுமான காலத்தில் குறிப்பாக கவனம் தேவை என்பது சரியே. இதை ஆய்வுக்குழு செய்த சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கைகளே தெளிவாக எடுத்துக்கூறுகின்றன. எனவேதான் காற்று வீசும் காலத்தில்  புழுதி எழுந்துவிடாமல் குகைக்கு வெளியே நீரை தெளித்தும் இந்த கட்டுமான பணியால் எழும் புழுதியை குறைத்துவிடலாம் என ஆய்வு அறிக்கை ஆலோசனை தந்தது.

எல்லா மாதங்களிலும் காற்று வீசாது; காற்று வீசும் மாதங்களில் பணியின் வேகத்தை தீவிரத்தை குறைப்பது, புழுதி எழாத வேறு பணிகளை மேற்கொள்வது போன்ற யுக்திகளையும் கையாளவேண்டும். இஸ்ரோ தனது ராக்கெட் ஏவுதளத்தை நிறுவியபோது அந்த பகுதியில் இருக்கும் கிராம குடியிருப்பு பொறுப்பாளர்களை கொண்ட கமிட்டி அமைத்து, கட்டுமான காலத்தில், நடைமுறை வாழ்க்கையில் சிக்கலை எவ்வளவு தவிர்க்க முடியுமோ அவ்வளவு தவிர்த்தார்கள். அதே போல டெல்லியில் மெட்ரோ ரயில் கட்டியபோது அதன் தலைவராக இருந்த ஸ்ரீதரன் அவர்கள் பொறுப்புடன் தாங்கள் தோண்டிய எல்லா சாலைகளையும் அவர்களாகவே புதுப்பித்தனர். இதுபோல இங்கும் கட்டுமான காலத்தில் பொறுப்புடன் செயல்படுவதும் அவ்வாறு செயல்படுவதை கண்காணிக்க அந்த பகுதி குடியிருப்பு மக்கள் கொண்ட ஆலோசனை குழு போன்று புதுமையாக சிந்திக்க வேண்டும்.  

4)   பெர்மி லேப்-இந்திய அணுசக்தி துறை சேர்ந்து நடத்தும் ரகசிய குண்டு தயரிக்கும் ஆய்வு தானே இது? ஏன் உண்மையை கூற மாறுகிறீர்கள்?

தேனி பொட்டிபுரத்தில் இந்திய நியுட்ரினோ நோக்குக்கூடம் அமையவிருக்கிறது.  இந்த திட்டமே ஒரு அமரிக்கச் சதி. அமெரிக்ககாவோடு இந்தியா சேர்ந்துக்கொண்டு ராணுவ ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்காக தான் இந்த நோக்குக்கூடமே என சிலர் குற்ரம் சாட்டுகின்றனர். ஒரு தொலைகாட்ட்சி விவாத்தில் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியைச் சேர்ந்த பிரமுகர்  ராணுவ ஆராய்ச்சி தான்; பெர்மி லாப் இலிருந்து அனுப்பப்படும் நியுட்ரினோகளை ஆராய்வதற்கு தான் இந்த திட்டமே என் வாதத்தை முன்வைத்து அதனை நிறுவ தன்னிடம் வலுவான ஆதாரம் இருப்பதாக கூறினார். நியுட்ரினோ ஆய்வாளர்கள் வெளியிட்ட ஒரு கட்டுரையில் இது குறித்து குறிப்பு உள்ளது என்று கூறிய அவர் அந்த ஆய்வுக்கட்டுரையில் பெர்மி லேப் இலிருந்து சரியாக ஆறாயிரம் கிலோமீட்டர் தொலைவில் ஆய்வகம் அமைந்தால் நியுட்ரினோகளை அனுப்பி ஆராய வேண்டும் என கூறியுள்ளது. சரியாக பெட்டிபுரத்தில் இருந்து பெர்மி லேபுக்கு பூமிக்குள்ளார போறமாதிரி நேர்கோடு போட்டால் அது சரியாக ஆறாயிரம் கிலோமீட்டர் என கூறினார். வேடிக்கை தான்!  

அதாவது முதலாவதாக நியுட்ரினோ விஞ்ஞானிகள் எழுதிய ஓரு ஆய்வுக் கட்டுரையில் பெர்மி லேப்யிலிருந்து ஆறாயிரம் கிலோமீட்டரில் ஆய்வகம் அமைய வேண்டும் என கூறியுள்ளது; இரண்டாவது சரியாக பொட்டிபுரம் பெர்மி லேப்யிலிருந்து ஆறாயிரம் கிலோமீட்டர் தொலைவில் உள்ளது

இரண்டையும் கூட்டிபார்த்தல் அந்த ஆய்வு அறிக்கையில குறிப்பிடும் ரகசிய இடம் பொட்டிப்புரம்தான். எனவே இது பெர்மி லேப் திட்டம்; அமெரிக்க இந்திய கூட்டு சதி என அவரது வாதம் அமைந்தது.

மெய் நிலை என்ன? இதில் அறிவியலார்கள் அந்த ஆய்வு அறிக்கையில் கூற வருவது என்ன என்பது குறித்து வேறு இடத்தில் பாப்போம். இதில் இரண்டாவது கூத்தை எடுத்துக்கொள்வோம்.

அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் தொலைவு இருபதாயிரம் கிலோமீட்டருக்கு மேல் என எல்லோருக்கும் தெரியும். அதை அவர் கூறவில்லை. பூமியின் மேலே விமானம் கப்பல் போன்றவை நேர் கோட்டில் போனால் உள்ள தொலைவு அல்ல.  பொட்டிப்புரத்திலிருந்து ஒரு பறவை சரியாக நேர்கோட்டில் பறந்து சென்று பெர்மி லேப்யை அடைந்தால் அது எடுக்கும் தொலைவும் அல்ல. இவை இருபதினாயிரம் கிலோமீட்டர் வரை போகும்.

அவர் கூறியதை மேலும் தெளிவாக கூறிவிடுகிறேன்.  ஆராஞ்சு பழத்தில் கோணி ஊசி கொண்டு துளை செய்தால் ஒரு புள்ளியிலிருந்து எந்த புள்ளிக்கும் துளை போடமுடியும் அல்லவா? அதுபோல பூமியை ஆராஞ்சு பழமாக கற்பனை செய்து அதில் பொட்டிபுரம் எனும் புள்ளியிலிருந்து பெர்மி லேப் எனும் புள்ளிக்கு துளை செய்தால் அந்த கோட்டின் தொலைவு ஆறாயிரம் கிலோமீட்டர் எனவும் அதனால் தான் பொட்டிபுரத்தை தேர்வு செய்துள்ளனர் எனும் தகவலை கூறி இது தான் ஆதாரம் என்றார்.

தமிழகத்திலே நாம் நிற்கும் இடத்தில் நேராக தரையை தோண்டிக் கொண்டே சென்றால் பூமிக்கு அந்த புறம் வரும் நாடு அமெரிக்கா - அல்லவா? அதனால் தானே நமக்கும் அவர்களுக்கும் பன்னிரண்டு மணிநேரம் காலவிதியாசம் உள்ளது. இங்கே பகல் பத்து மணி என்றால் அங்கே இரவு பத்து மணி.

பூமியில் இன்னொரு பக்கம் அமெரிக்கா உள்ளது என்றல், பூமியினுடைய பூமியிடைய விட்டம் என்னவோ அதுதான் பொட்டிபுரத்துல இருந்து அமரிக்காவுக்கு சுமாரான பூமியை துளைத்து செல்லும் சுமாரான தொலைவா இருக்கும் அல்லவா?

பூமியின் ஆரம் 6400 கி.மீ! விட்டம் சுமார் 12800 கிமீ.  அப்படியென்றால் பொட்டிப்புரத்துல இருந்து பூமிக்குள்ள 6400 கி.மீ பாதி தூரம் தான் செல்ல முடியும்! பூமிக்கு நட்ட நடுவுலதான் இருப்போமே தவிர அமரிக்கா சென்றடைய மாட்டோம். இந்த ஒரு சிறிய செய்தியை தான் சரிபார்க்கனும்னு தோன்றாத அளவிற்கு அவருடைய  மனதில் பிதியக் கிளப்பியது யார்? "அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்" என்ற பழமொழி தான் அந்த அரசியல் பிரமுகரின் வாதத்தை கேட்டபின் எனக்கு தோன்றியது.

அடுத்ததாக பெர்மிலாப் என்ன பூதம் என்பதையும் பார்ப்போம். பெர்மிலாப் (உலகத்தில் உள்ள பல அடிப்படை ஆய்வு நிறுவனம் போல) உலகத்தின் பல நாடுகளுடன் ஒப்பந்தம் செய்து அங்கு உள்ள விஞ்ஞானிகளின் உதவியோடு பல கூட்டு ஆய்வுகளை மேற்கொள்கிறது. இந்தியாவில் உள்ள ஆய்வு நிறுவனங்களும் அடிப்படை அறிவியல் ஆய்வில் கூட்டு ஆய்வுகள் மேற்கொள்வது சகஜம்.  இங்கே அடிப்படை அறிவியல் என்பதை கவனமாக வாசிக்கவும்; தொழில்நுட்ப அல்லது வடிவமைப்பு ஆய்வுகளில் காப்புரிமை உள்ளதால் அதில் கூட்டு ஆய்வுகள் அமைவதில் சிக்கல் உண்டு. அடிப்படை ஆய்வுகள் காப்புரிமை பெறமுடியாது; உலகப் பொதுச்சொத்து என்பதால் எல்லா நாட்டு விஞ்ஞானிகளும் அதில் கூட்டு பங்கெடுப்பு செய்வதில் தடையில்லை.

பெர்மிலாப் என்பது பல்கலைகழகம் போல சிவிலியன் ஆய்வு நிறுவனம் தான். அமெரிக்கா பாதுகாப்பு துறை அமைப்பு அல்ல. எடுத்துகாட்டாக இன்றைக்கு அமெரிக்காவின் முக்கிய மூன்று எதிரிகள் - ஈரான், கியுபா  மற்றும் வடகொரியா என எல்லோருக்கும் தெரியும். நியூட்ரினோ குறித்த பெர்மிலாப் DUNE ஆய்வில் இந்தியா மட்டுமல்ல ஈரானும் உறுப்பினர்! மொத்தம் முப்பது நாட்டு ஆய்வாளர்கள் இணைந்து அமெரிக்காவின் ஒரு நகரிலிருந்து வேறு ஒரு நகருக்கு "செயற்கை நியூட்ரினோக்களை" அனுப்பி ஆய்வு செய்கிறார்கள். அதாவது அந்த ஆய்வில் வெளியாகும் அணைத்து தகவல்களும் ஏனைய நாட்டு அறிவியலர்களுக்கு கிடைப்பது போலவே  இரானிய விஞ்ஞானிகளுக்கும் கிடைக்கும். இதில் இந்திய விஞ்ஞானிகளும் பங்குபெறுகின்றனர். இந்த ஆய்வு ராணுவ ரகசிய ஆய்வு என்றால் தனது எதிரி நாடான ஈரானை கூட்டாளியாக பங்கெடுக்க அனுமதிக்குமா?

பனிப்போரின் பொது கூட பெர்மிலாப்-ல் ரஷ்ய விஞ்ஞானிகள் பணிபுரிந்துள்ளனர். தற்போது அமெரிக்காவின் ஆகப்பெரிய எதிரியாக இருக்கும் ஈரானிய விஞ்ஞானிகள் கூட அமெரிக்க பலகலைக் கழகங்களில் நியுட்ரினோ உயர்கல்வி பெற்று ஆய்வு மேற்கொண்டு அனுபவம் அடைந்து பின்னர் ஈரான் சென்று அங்கு தமது ஆய்வுகளை தொடர்ந்து வருகின்றனர் (எடுத்துகாட்டாக Yasaman Farzan எனும் ஈரானிய பெண் விஞ்ஞானி குறித்து கூகிளில் பார்க்கவும்). எனவே இந்திய விஞ்ஞானிகள் சிலர் பெர்மிலாப் உடன் இணைந்து ஆராய்ச்சி செய்வதும் அதில் சில ஆய்வுகள் நியுட்ரினோ தொடர்பாக இருப்பதும் ஒன்றும் வியப்பான செயல் அல்ல. எனினும் பெர்மிலாப் ஆய்வுக்கும் இந்திய நியுட்ரினோ நோக்குக்கூட ஆய்வுக்கும் தொடர்பு இல்லை. இரண்டும் நியுட்ரினோ குறித்த அடிப்படை ஆய்வுகள் என்றாலும் அது வேறு கேள்விகளுக்கான ஆய்வு; இது வேறு கேள்விகளுக்கான ஆய்வு.

மேலும் அடிப்படை அறிவியல் சர்வதேசிய தன்மை வாய்ந்தது. குறிப்பிட்ட அடிப்படை அறிவியல் கேள்வி குறித்து ஆராயும் இரண்டு ஆய்வுக்குழு இடையே ஆரோக்கியமான போட்டி இருக்கும் என்றாலும் இவை "ராணுவ ரகசிய" ஆய்வு போல ஒரே நாட்டு  விஞ்ஞானிகள் மட்டும் பங்குபெறும் 'ரகசியமான" ஆய்வாக இருக்காது. போட்டி போடும் விஞ்ஞானிகள் கூட அவ்வப்போது அறிவியல் கருத்தரங்குகளில் கூடி ஏற்பட்டுள்ள முன்னற்றங்கள் குறித்து கட்டுரை வாசிப்பார்கள்.

5) நியூட்ரினோ கற்றைகளை கொண்டு "அணுஆயுதங்களை" கண்டறிந்து செயலிழக்கசெய்யமுடியும் அல்லது வெடிக்கச்செய்யமுடியும் என்று பல்வேறு அறிவியல் தரவுகளுடன் (Hirotaka Sugawara,) கூறுகிறாரே? நியுட்ரினோ ஆய்வு அழிவுக்கான ஆய்வு தானே?

முதலில் வெறும் நியூட்ரினோ   கற்றைகளை (neutrino beam) கொண்டு நுண் ஆராய்ச்சி தான் செய்ய முடியுமே தவிர அணு ஆயுதங்களை அழிக்கமுடியாது. அதற்க்கு மீ ஆற்றலுடன் கூடிய நியூட்ரினோ கற்றைகள் தேவை. மீ ஆற்றலுடன் கூடிய கற்றைகளை தான் இன்று நம்மால் உருவாக்க முடியாது. சாதாரண கற்றைகளை கடந்த நாற்பது வருடங்களாக உருவாக்கி உலகின் பல பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.

நியூட்ரினோக்களை எப்படியெல்லாம் பயன்படுத்த முடியும் எனற கேள்வி எழுந்தபோது Hirotaka Sugawara et al – Destruction of Nuclear Bombs Using Ultra High Energy Neutrino Beam, June 2003 யும் ஆல்பிரட் டோனி (Neutrino Counter Nuclear Weapon Alfred Tony, 26 June 2013) யும் அணு ஆயுதத்திற்கு எதிராக செயல்படும் கருவியாக நியூட்ரினோக்களை பயன்படுத்தலாம் என கருத்து தெரிவித்துள்ளனர்.

Hirotaka,sugawara, Hiroyuki hagura, Toshiya sanami எழுதியுள்ள கட்டுரையின் தலைப்பு "Destruction of Nuclear Bombs Using Ultra-High Energy Neutrino Beam”; அதாவது மீ ஆற்றல் நியூட்ரினோ உதவியுடன் அணுஆயுதங்களை செயலிழக்க செய்தல் என்பது; அதேபோல ஆல்ஃப்ரெட் டாங்க்  கட்டுரையின் தலைப்பு “Neutrino Counter Nuclear Weapon - அதாவது நியூட்ரினோவால் அணு ஆயுதத்தை ஒழிப்போம் என்பதாகும். உள்ளபடியே இவை "நியூட்ரினோ குண்டு" தயாரிக்கும் ஆய்வுகள் இல்லை. அதற்கு நேர்மாறாக அணுஆயுதங்களை செயலிழக்க செய்யும் கருவி வடிவமைப்பு குறித்து ஆகும்.

இது எப்படி அழிவுக்கான ஆய்வு ஆகும்? மீ ஆற்றல் கொண்ட நியூட்ரினோ கொண்டு யார் எங்கு வைத்திருந்தாலும் அணுகுண்டுகளை செயலிழக்க செய்ய நியூட்ரினோக்களை பயன்படுதல்லாம் என்கிறது ஒரு ஆய்வுக்கட்டுரை. அதாவது தீபாவளி பட்டாசு மீது நீரை ஊற்றினால் அது வெடிக்காது அல்லவா? அதுபோல அணுகுண்டு மீது மீஆற்றல் கொண்ட நியூட்ரினோக்களை பாய்ச்சினால் அந்த குண்டு செயலிழந்துவிடும்.

அதே போல எல்லா அணுகுண்டுகளும் நியூட்ரினோக்களை வெளியிடும். எனவே இப்போது உள்ளதைவிட மிகமிக நுட்பமாக மீ ஆற்றல் கொண்ட நியூட்ரினோக்களை உணரும் கருவியை கண்டுபிடித்தால் ரகசியமாக எந்த ஒரு நாடும் அணுகுண்டு வைத்திருந்தால் அதனைக்கூட கண்டுபிடித்து விடலாம். அதாவது பூவின் வாசம் கொண்டு அறிவதுபோல அணுகுண்டுகள் தாமே வெளிபடுத்தும் நியூட்ரினோக்களை இனம் கண்டு அறியலாம் என்கிறது இரண்டாவது ஆய்வு. இரண்டும் "குண்டுகள்" தயாரிக்க அல்ல! அணுஆயுதங்களை ஒழிக்கும் கருவிகள். வேறுசிலர் நியூட்ரினோ உணர்வு கருவி கொண்டு நடைமுறையில் கதிரியக்கக் கசிவுகளை கண்டுபிடிக்கலாம் என கூறுகிறார்கள்.

இவை ராணுவ ரகசியமும் இல்லை. மேலே உள்ளே பெயர்களை கூகிளில் தேடினால் இந்த கட்டுரைகளை முழுமையாக நீங்களே கூட பெறலாம். ராணுவ வடிவமைப்பை யாராவது பொதுவெளியில் வைப்பார்களா என்ன? அப்படி குண்டு தயாரிக்கும் ராணுவ ஆய்வு என்றால் ஈரானும் அமெரிக்காவும் இணைந்து செயலற்றுவார்களா?

எனினும் இன்றைய நிலையில் இந்த கருத்துக்கள் ஹாலிவுட் கருத்துக்கள் தாம். மேலும் இவை ஏட்டுச் சுரைக்காய் ஆய்வுகள். அதாவது நடைமுறை சாத்தியமற்ற கருத்துகள். உள்ளபடியே இந்த ஆய்வு விஞ்ஞானிகள் கூறும் கருவி செய்ய 1000 கிலோமீட்டர் சுற்றளவு உள்ள, நான்கு வழி பாதை அளவுக்கு பூமிக்கு கிழே சில கிலோமீட்டர் அடியில் வட்ட சுரங்கம் அமைக்கவேண்டும்.  இந்த கருவியை செயல்படுத்த இங்கிலாந்து ஒரு ஆண்டு பூராவும் பயன்படுத்தும் அளவு -50 GW- மின்சாரம் வேண்டும். அதாவது இந்த கருவியை இயக்க சுமார் 50000 கூடங்குளம் அளவு மின்சாரம் வேண்டும்! வெறும் ஏட்டுசுரைகாய் ஆய்வு. வெகுகாலம் வரை நடைமுறையில் சாத்தியமே இல்லாத கற்பனை. அதே ஆய்வு அறிக்கையிலேயே அவர்களே குறிப்பிடும் செய்திதான் இது.

6) ஏன் 50,000 டன் இரும்பை வைத்து மின்க்கந்தம் ஏற்படுத்தி கருவியை அமைக்கவேண்டும்? சிறிதாக வைத்துக் கொள்ளகூடதா?

ICAL எனப்படும் நியுற்றினோ அளவை உணர்வீ மொத்தம்  50,000 டன் இரும்பு தகடுளை கொண்டு இருக்கும். இரண்டு தகட்டின் இடையில் மின்னணு உணர்வி இருக்கும். இந்த கருவியில் மொத்தம் சுமார் 6 க்கு பிறகு இருபத்தி ஒன்பது 0- பூச்சியங்களை இட்டால் வரும் தொகையில் இரும்பு அணுக்கள் இருக்கும்.  மலை குகையில் இந்த கருவியை வைத்தாலும் எல்லா காஸ்மிக் கதிர்களையும் முழுமையாக தடுத்து நிறுத்த முடியாது. மலையின் பாறைகளை கடந்து ஒரு மணி நேரத்தில் சுமார் 300 காஸ்மிக் கதிர்கள் அந்த உணர்வீ கருவியில் சமிக்கைகளை ஏற்படுத்தும். நியுற்றினோக்கள் மிகமிக குறைவாக மற்ற பொருள்களுடன் வினைபுரியும் எனவே அதனை ஆராய்வது எளிதல்ல.   அந்த கருவியில் ஒரு நொடிக்கு சுமார் கோடிகோடி நியுற்றினோக்கள் விழும் என்றாலும் அதில் ஆகக் கூடுதலாக ஒரு நாளைக்கு சுமார் 10 தடவை எதாவது இரும்பு அணுவுடன் வினைபுரியும் என எதிர்பார்கிறார்கள். காஸ்மிக் கதிர்கள் ஏற்படுத்தும் சமிகையின் ஊடே தான் நியுற்றினோ ஏற்படுத்தும் வினையை பிரித்து அறியவேண்டும். ஆய்வுக் காலத்தில் கருவியில் ஏற்படும் சமிக்கை காஸ்மிக் கதிரின் சமிகையா அல்லது  நியுற்றினோ ஏற்படுத்திய வினையா என்பதை தான் ஆராய்ச்சி செய்து தரவுகளை சேகரிப்பார்கள். இவ்வாறு ஆய்வு செய்யும்போது, இந்த பத்தில் ஒரு நாளைக்கு சுமார் மூன்றை தான் நியுற்றினோவினை என உறுதிபாட்டுடன் பிரித்து அறியமுடியும். இவ்வாறு தான் மெல்ல மெல்ல தரவுகளை பத்து ஆண்டுகள் சேகரித்து மூன்று வகை நியுற்றினோவில் எதன் நிறை கூடுதல் எதன் நிறை குறைவு என கணிதம் செய்வார்கள்.

பெரிதாக வைத்தால் சடுசடுவென ஆய்வு செய்ய முடியும். ஆனால் அவ்வளவு பெரிய காந்தத்தை துல்லியமாக வைப்பது சாத்தியப்படாது. ஆய்வு பாழ்படும். கருவியை சிறிதாக வைத்தால் பத்து ஆண்டுகளுக்கு பதிலாக ஐம்பது நூறு ஆண்டுகள் எடுக்கும். ஆய்வே வீணாகும். எனவே தான் சரியான நடைமுறை சாத்தியாமான அளவில் கருவியை வடிவமைத்துள்ளனர்.

7) இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் வாழ்வாதாரத்தை இழக்கும் அப்பகுதி மக்களுக்கு இந்தத்திட்டத்தால் என்ன நன்மை கிடைக்கும்?

எந்த  வாழ்வாதாரம் பறிபோகும்? இந்த திட்டத்துக்காக நிலம் கையகப்படுதப்போவது இல்லை,. இந்த ஆய்வு மையம் அமைய வேண்டிய 66 ஏக்கர் தரிசு நிலத்தை தமிழக அரசு இலவசமாக வழங்கியது. இதற்காக எந்த விவசாய நிலமும் கையகப்படுத்தப்படவில்லை. நீர் தேவையும் வெகு குறைவே. பாதிப்பு ஒன்றும் ஏற்படுத்தாது. மரம் காடுகள் வெட்டப்போவது இல்லை. கட்டுமான சமயத்தில் வேண்டுமென்றால் அங்கே இங்கே டிரக் லாரிகள் செல்லும். அதற்கும் கிராமத்துக்கு வெளியே சாலை அமைக்கக் திட்டம்.  இது அடிப்படை ஆய்வு திட்டம்; எனவே வேலைவாய்ப்பு போன்ற வசதிகள் நேரடியாக தராது.

இந்தத்திட்டத்தால் என்ன நன்மை கிடைக்கும் என்று கேட்டல் வரலாற்றில் இந்த வகை ஆய்வுகள் என்ன நன்மை ஏற்படுத்தின என்பதை தான் கோர முடியும். நியுட்ரினோ என்பது ஒருவகை அடிப்படை துகள் எனவே இது அடிப்படை துகள்கள் ஆய்வு என்ற வகையில் படும். ஏலேக்ட்ரோன் என்பதும் துகள் தான். இன்றய எலெக்டிரானிக்ஸ் மின்னணு கருவிகள் இயங்குவது இந்த அடிப்படை ஆய்வின் தொடர்ச்சியா தான். பாசித்திரன் என்பதும் ஒருவகை அடிப்படை துகள் - அதைவைத்து தான் பெட் ஸ்கேன் கருவி இயங்குகிறது. அதுபோல எதிர்காலத்தில் நியுட்ரினோ கொண்டு தகவல் தொடர்பு மற்றும் கதிரியக கசிவு இனம் காணுவது போன்ற பயன்பாடுகள் இருக்கும் என எதிர்பார்கிறார்கள்.

Comments